அன்பாய் என்னை
அணைத்திடுவாயோ;
ஆசை முத்தம்
பதித்திடுவாயோ;
நற்பண்புகள் பல
புகட்டிடுவாயோ;
உலகம் அறிய
செய்திடுவாயோ!
சுவரில்லாமல்
சித்திரம் ஏதோ?
சுவர்முழுக்க என்
கிறுக்கல் தானோ,
அந்த கிறுக்கல் ரசிக்கும்
கிறுக்கன் நீயோ!
இரவெல்லாம்
விழித்திருப்பது
மழலை முகம்
ரசிக்கத்தானோ?
பகலெல்லாம்
காத்திருப்பது
மழலை மொழி
கேட்கத்தானோ?
என் கல்லாட்டத்தின்
கள்ளாட்டம் எவனோ?
நொண்டியில்
ஒற்றை கால் பலமும்
அவனே!
பரமபதத்தில்
ஏற்றிடும் ஏணி
எவனோ?
என் மணல்வீட்டை
காத்திடும் அரணும்
அவனே!
நான் தாண்டிக்குதிக்க
பச்சை குதிரை
ஆனவன் எவனோ?
நான் ஊஞ்சல் ஆட
ஆலமர விழுதாய்
தாங்கியவனும் அவனே!
பனைமர வண்டி
செய்திடுவானோ;
பட்டுத்துணி
தெய்திடுவானோ;
என் புன்னகை தொடுத்து
பொன்னகை செய்வானோ;
கர்வமாய் அதை
அணிந்து செல்வானோ!
ஆவதும் பெண்ணாலே,
அழிவதும் பெண்ணாலே,
என்றவரை தள்ளினாய்
பின்னாலே!
ஆசைக்கும் பெண்,
ஆஸ்திக்கும் பெண்,
என்றுரைத்தாய்
அவர் முன்னாலே!
ஐய்யோ…
உன்னை
அப்பன் என்பதா?
என்மேல்
பித்தன் என்பதா?